Friday, January 28, 2011

மனித நேயம்!

பல்சுவைப்பதிவில் பல பல்சுவையான பதிவுகளில் கவிதையானது முக்கியமானதாகும். மேலும் நான் 09/12/2010ம் திகதி வெளியிட்ட ''கவிதைத் துளிகள்'' எனும் பதிவில் எனது தந்தை அரசாங்க திணைக்களத்தினால் நடைபெற்ற அரசாங்க திணைக்களத்தில் கடமையாற்றுவர்களுக்கான கவிதை போட்டியின் போது அகில இலங்கை ரீதியாக மூன்றாம் இடத்தை பெற்றவர் என்று குறிப்பிட்டு இருந்தேன். இப்பொழுது அந்த மனித நேயம் என்ற கவிதையை பிரசுரிக்கிறேன். மட்டுமல்லாது இது பெரிய தொகுப்பு ஆகையால் இரு பதிவுகளாக பிரசுரிக்கிறேன்.



மனிதனை மனிதன் வதைத்து மரணித்ததைக் கண்டோம்
மரணிக்கும் தறுவாயில் அவனை வதைத்து மகிழ்ந்ததையும் கண்டோம்
மரணிப்பவன் வேண்டும் தண்ணீரை மறுத்ததையும் கண்டோம்
மனித மாண்பு மொத்தத்தில் மரணித்தையும் கண்டோம்.
சட்டம் சதி செய்த சரிதைகள் பல,
சந்தர்ப்பம் குற்றமாக்கிய கதைகள் உள,
உண்மையை பொய்யாக்கிய உரைகளும் உள,
ஒரு சார்பாய் பொய்ப்பக்கம் சார்ந்த தீர்ப்புகளும் உள,
உண்மையில் மனித நேயம் ஒடிந்து விட்டதா? – அன்றேல் ஒழிந்து விட்டதா?


தரையில் அமர்ந்த அந்தகன் அவன் - தன்
முன்னே சீலையை விரித்து....
தர்மம்,தர்மம் என வேண்ட....
தயவான்கள் பலரும் தர்மம், அளித் செல்ல....
தப்புக் குணம் கொண்ட ஒருவன்....
தர்மம், அளிப்பவன் போல் குனிந்து
அவன் தர்மத்தை தனதாக்கும் - காட்சி
தவறி விட்டதா, மனித நேயம்
இதற்கு தலை பறந்து விட்டதா?

அடித்து வதை காட்டி அழுத்தி அனல்காட்டி
உதைத்து உயிர் வதைத்து உள் நீரில் அவனை அமிழ்த்தி....
வதைத்து வாஞ்சையின்றி மிதித்து உரித்துத் தோலை
'ஓ' வெனும் அலறல் பார்த்து....
மகிழும் மனிதனும் உளான் - இவன் தன்
மனித மாண்பு எத்தகையது?



தந்தையை வதைத்த தனயனும் உளான்
தாயை உமிழ்ந்த தயவற்றோனும் உளான்
தன்னையே வளர்த்துச் செல்லும் தன்வாளனும் உளான்
தனதாக்கி மற்றோரை தவிக்க விட்டவனும் உளான்
தப்பையே சதா செய்யும் தப்பாளனும் உளான்
தரணியில் மனித நேயத்தை தலை சாய்த்தவனும் உளான்.

அயல் வீட்டார் வளர்ச்சி அவனுக்கு அனலாக தகைக்கிறது
அவன் காட்டும் உயர்ச்சி அவனை அந்தரத்தில் உயர்த்துகிறது
ஆக மட்டும் அவன் உயர்வை அறுக்கவே பார்க்கிறான்
அர்த்த சாம நேரமின்றி அக மனதில் குமுறுகிறான்
வந்த சந்தர்ப்பம் பார்த்து நின்று வதைக்கவும் துணிகிறான்
வாஞ்சையின்றி மனித நேயத்தை வடுவாக்கி பணிகின்றான்.


கோல்லான் புலாலை மறுத்தானை என்றும்
எல்லா உயிரும் தொழும்
எல்லா அன்பே வயமான இவனை
இகமே ஏந்தி நிற்கும்
நல்லான் இவனென்றும் நடுவன அவனென்றும்
நானிலமே தலை பணியும்
உள்ளான் அவவென்றும் உயர்ந்தோன் அவனென்றும்
உலகம் உள்ளமட்டும் சொல்லி நிற்கும்.

வளர்த்த பசுவை வாஞ்சையுடன் தடவுவதும்
அதன் வளர்விற்கு உணவிட்டு வகை வகையாய் - பார்ப்பதும்
வேடிக்கை இதுவென்னு வீண்வாதம் புரியாதீர்!
வேகுமுன் நெருப்பில் - நாம் வேண்டும் மனித நேயம்
காட்டும் அவை கடமை பாசம் கருணை
செய்பவனுக்கு பலனைக்காட்டும்
ஈட்டும் இவை மனித சேயம் - எல்லாம்
சேர்ந்த மனித நேயம்.

பசித்தவன் பார்த்திருக்க பல்சுவை உணவருந்தி
பச்சாபப்படாமல் பார்த்து நிற்கும் கல் மனத்தான்
எக்காலும் உருப்படான் இது நியதி பொது வழக்கு
பொற்கால மனித நேயத்தை அவன் பொடியாக்கி வாழ்வதேனோ?

அன்பை வழக்காக்கி அக மனதில் நிலை நிறுத்தி
பண்பை செயலில் காட்டி பரிவை உயர்வாக்கி
உண்மை என்றும் பேசி ஒவ்வாமை மறுத்து நிற்கும்
தன்மை எவன் உளானோ தகைமை மனித நேயத்தான்.


நன்றி!

2 comments:

Unknown said...

நெஞ்சைச் சுருக்கென்று குத்தும் வரிகள்.
//சட்டம் சதி செய்த கதைகள் பல,
சந்தர்ப்பம் குற்றமாக்கிய கதைகள் உள,
உண்மையை பொய்யாக்கிய உரைகளும் உள,
ஒரு சார்பாய் பொய்ப்பக்கம் சார்ந்த தீர்ப்புகளும் உள,
உண்மையில் மனித நேயம் ஒடிந்து விட்டதா? – அன்றேல் ஒழிந்து விட்டதா?//
கண்டிப்பாக இது பலரைச் சென்றடைய வேண்டும்.

விஜயகுமார் ஐங்கரன் said...

@malgudiஉங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி நண்பா. மேலும் உங்களின் ஆசிவாதத்துடன் இது கண்டிப்பாக பலரையும் சென்றடையும்.

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...