Saturday, December 25, 2010

கொடிய சுனாமியே சென்றுவிடு!

நாளைய தினம் சுனாமி பேரலையின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் ஆகும். இந்த சுனாமி பேரலை என்றவுடன் அதன் கோர(இராட்ச்சத) அலைதான் முதலில் ஞாபகம் வரும். இந்த சுனாமியைப்பற்றி தெற்காசிய நாடுகளில் வசிக்கும் ஆறு வயது குழந்தை முதல் அறுபது வயது தாத்தா வரை எல்லோருக்கும் தெரியும்.அதிலும் இலங்கை மற்றும் இந்தியா நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சுனாமி பற்றிய அனுபவம் என்பது வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்றாகும். இப்படி கொடிய சுனாமி பேரலையின் போது பிரிந்த எம் உறவுகளினதும் மற்றும் சகோதரங்களின் நினைவுகள் இன்றும் என்றும் எம் மத்தியில் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாத விடயமாகும். அத்தோடு இந்த சுனாமி பேரலை 2004.12.26 இதே போன்று ஒரு ஞாயிற்று கிழமையில்தான் வந்தது என்பது குறிப்பிடதக்கவிடயமாகும். இந்த சுனாமி பேரலையின் பின்னர் எனது தந்தை எம் சகோதரங்களின் நினைவாக ''சுனாமியே சென்றுவிடு'' எனும் கவிதையை புனைந்தார்.அந்த கவிதையை நான் எனது வலைப்பின்னலில் இப்பதிவில் பிரசுரிக்கிறேன்.அத்தோடு சுனாமி பேரலையின் போது பிரிந்த எம் உறவுகளினதும் மற்றும் சகோதரங்களின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டிக்கொள்கிறேன். 
 
சுனாமியே சென்றுவிடு வந்த அலையில் கால் பதிந்து வாஞ்சையுடன் - அதை அள்ளி வருடிச் செல்லும் நீரலையில் வன வளப்பாய் - எமை மறந்து கால் பதித்த இடம் நீராய் கழுவிச் செல்லும் - நிலை பார்த்து கடல் நண்டு மிடுக்காய் கணப் பொழுதில் - மறைத்தல் கண்டு காலம் காலமாய் கருணையுடன் களிப்புத் தந்த கடற் பரப்பு-அன்று எமை கணப் பொழுதில் கர்ச்சித்து காவு கொண்டதேனோ? கலக்கம் தந்து கதியற்றவராக்கியதேன்? கணவனவர் கடல் செல்லும் காரியத்திற்கு துணை நின்று காரிகையாள் வழி சொல்வாள் கைபிடித்தவன் முகம் பார்த்து கழிவிரக்கம் தனைக் காட்டி கணவனவன் விடை சொல்வான் கணவனவன் திரும்ப மட்டும் கடவுள்தனை கணம் மறவா கரம் பிடித்தாள் தினம் செய்வாள் அகல் விளக்கைச் சுடர் ஏற்றி ஆண்டவனை மனம் நினைத்து அவள் குங்குமத்தை திலகமிடுவாள் பால் பொழுதைக் கண்டவுடன் பார்த்த கரை திசை நோக்கி பற்றாளனைப் பார்த்து நிற்க பச்சாபம் இன்றி கடல் அலையே பற்றித்தான் இழுத்துச் சென்றதேன்? மணல் வீடு கட்டி கடற்கரையில் விளையாடினோம் மனதார அலை தொட்டு நுரை அள்ளி நிறைவாகினோம் கடலோரம் சென்று காதலாய் ஸ்பரித்தோம் கால் பதித்த தடம் பார்த்து கரை நின்று களிப்படைந்தோம் அலை பார்த்து அச்சமின்றி ஆழ் கடலை வகை பார்த்தோம் ஆதங்கம் மேலிட்டு ஆண்டவனுக்கு நன்றி சொன்னோம் குறி பார்த்து சுடுவதாய் கொண்ட கோப மேலிட்டால் வகை தொகை தெரியாம் வாரிச் சென்றதேன்? வாழவைத்த கடற்பரப்பே எம் வாழ்வைத்தான் -அழித்ததேன் ஆக மட்டும் உன்னை அண்டியிருந்த குடிப் பிறப்பை – அள்ளித்தான் சென்றதேன்? பால் குடித்த பச்சிலங்களை ஏணையில் பற்றி இழுத்துச் செல்ல – பாவம்தான் ஏது செய்தது? பரம் பொருளே உனை அறிய அறநெறிக்கு வந்த அத்தனை உயிர்கள் பலியாகிப் போனதேன்? நிலைத்த கடல் காவு வரலாற்றை நிலத்தில் - நிலைபெறச் செய்ததேன்? காலப்பிரளயமோ கலியுக கடல் காவுகையோ? ஊழிக் கூத்தோ உலகு அழவோ? காலக் கர்ச்சிபோ கடல் சீற்றமோ கழிவரக்கமற்ற நாதித் தாண்டவமோ? பூமி நடுக்கமோ? பூகோளப் பிளவோ? புதிரான கடல் அலைப் பிரவாகமே! ஆதான அத்தனை அழிவுதனைக் செய்து முடித்த அங்காரச் சுனாமியே அகன்று விடு பூகோள நிலப்பரப்பில் நீ கொண்ட பொறாமைதனை பொறுமையுடன் நிறுத்தி விடு. நன்றி!

2 comments:

Unknown said...

அழகான கவிதை ;அகோரமான நினைவுகள்.
வாழ்த்துக்கள்.

விஜயகுமார் ஐங்கரன் said...

@malgudiஉங்களின் ஆதரவு மற்றும் கருத்துக்கு நன்றி நண்பா!

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...